சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மிக தீவிரமாக பிரசாரம் நடந்து வருகிறது.இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் தலை தூக்கி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சாதி, மதம் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சாதி, மதத்தை வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்களை கோர்ட்டு தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்ந்தவரும், தேர்தல் ஆணைய வழக்கறிஞரும் ஆஜராகி வாதாடினார்கள்.

அப்போது நீதிபதிகள், “சாதி, மதத்தை தூண்டி விட்டு வாக்கு சேகரிக்க நினைக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.சாதி, மதத்தை கையாண்டு எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்ய முயன்றால் அவர்கள் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மேலும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதிகப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.