தலையணையால் அமுக்கி கணவரை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடி..!!

தலையணையால் அமுக்கி கணவரை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடி..!!

மதனப்பள்ளியில் தலையணையால் அமுக்கி கணவரை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதனப்பள்ளி மண்டலம் முலகலதின்னா கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 30), விவசாயக்கூலி. இவருடைய மனைவி சுகுணா (28), இருவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சுகுணா, குரவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பொன்னய்யா என்பவரிடம், கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேலைக்குச் சென்று வரும்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. அவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் பாபுவுக்கு தெரிய வந்தது. அவர், தன்னுடைய மனைவி மற்றும் பொன்னய்யாவை கண்டித்தார். இருவரும், தங்களின் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இருவருடைய நடத்தையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொன்னய்யாவை பாபு தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவரையும், சுகுணாவையும் ஒரு அறையில் வைத்து, பாபு அடித்து உதைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு பாபு மீது ஆத்திரம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்புக்கு பாபு இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும், பாபுவை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பாபு தனது மகள், மகனுடன் வீட்டின் ஒரு அறையில் படுத்துத்தூங்கி கொண்டிருந்தார். அப்போதுயாருக்கும் தெரியாமல் பாபுவின் வீட்டுக்கு வந்த பொன்னய்யா, சுகுணாவுடன் சேர்ந்து தலையணையால் பாபுவின் முகத்தில் வைத்து அமுக்கி, அவரை கொலை செய்ய முயன்றனர்.

அப்போது பாபு கூச்சலிட்டு பயங்கர சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பொன்னய்யாவும், சுகுணாவும் வீட்டின் மற்றொரு அறையில் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு பதுங்கி கொண்டனர். திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் கட்டிட மேஸ்திரி பொன்னய்யாவையும், சுகுணாவையும் பிடித்து வந்து, ஒரு மரத்தில் கட்டி வைத்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் மதனப்பள்ளி போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிபிரகாஷ்ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்னய்யாவையும், சுகுணாவையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.