மத்தியப் பிரதேசத்திலும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைப்பு...

மத்தியப் பிரதேசத்திலும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைப்பு...

போபால்: குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் யோசனை கூறினர். இதையடுத்து பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் மத்திய அரசு குறைத்தது. அதன்பின்னர், மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதினார். 

அந்தக் கடிதத்தில், மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இதை ஏற்று பா.ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிர மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தன. இதைத்தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச மாநிலமும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. டீசல் மீதான வாட் வரி 5 சதவீதமும் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதமும் குறைக்கப்படும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.