மும்பையில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து கடும் பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து கடும் பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.இந்நிலையில், இன்று காலை முதல் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

காலை நேரத்தில் மழை கொட்டியதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் மற்றும் விமான சேவை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு முதல் 3 நாட்களுக்கு மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் மழை தொடர்பான விபத்துக்களில் 2 பேர் இறந்துள்ளனர். நாசிக்கில் உள்ள நிபாட் தாலுகாவில் ரூபாலி பாவ்சாகேப் போய் (18), மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதேபோல், காளிதேவி கோவில் அருகே புவப்பா புஜப்பா கலால் (52), என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.