மியான்மர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மியான்மர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.இதற்கிடையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.இந்நிலையில், இன்று மேலும் 12 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.

இதனால் தாப்யோ கோன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சப்படுகிறது.இதற்கிடையில், மியான்மரில் இன்னும் ஒரிரு நாட்களுக்கு கனமழை நீடிக்க கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.