துண்டிக்கப்பட்ட காலை தலையணை ஆக்கிய விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு உ.பி. அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

துண்டிக்கப்பட்ட காலை தலையணை ஆக்கிய விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு உ.பி. அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

லக்னோ:  ஜான்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய தலைக்கு தலையணை வைக்காமல் மருத்துவர்கள் அவருடைய துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக வைத்து உள்ளனர். தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காகதான் கால் அகற்றப்பட்டது. 

இதுதொடர்பான செய்திகள் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்தி வெளிஉலகிற்கு தெரியவந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் முதல்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல் கிடைக்கப்பெற்றதும் மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறிஉள்ளார். 

பத்திரிகை செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இதுபோன்ற சமயங்களில் டாக்டர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்று மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.