கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக புனேயில் மந்திரி உதய் சாமந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

சில நாட்களுக்கு முன் நாங்கள் தேசியகீதம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்து இருந்தோம். இதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்குவதற்கு ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கல்லூரி பணிகள் தேசிய கீதத்துடன் தொடங்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான வருகிற 19-ந்தேதி முதல் கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதன் மூலம் வகுப்பு தொடங்குவதற்கு முன் 15 லட்சம் மாணவர்களாவது தேசிய கீதத்தை பாடுவார்கள். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மராட்டியத்தில் உள்ள பள்ளிகளில் அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பதை சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கம் கடந்த மாதம் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.