இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள், கிராமங்களின் மீது பாகிஸ்தான் படையினர் இன்று மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட ஷாப்பூர், கிர்னி ஆகிய எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திவரும் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.