குடியரசு தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்

 குடியரசு தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்

புதுடெல்லி: டெல்லியில் இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு கோலாகலமாக நடக்கிறது. இதற்கு பல அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

நாட்டின் குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.

நாட்டின் பெருமையை பறைசாற்றும்வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற உள்ளன. வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இந்த ஆண்டு, ‘ஆசியான்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இதனால் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் கருப்புப்பூனை படை வீரர்களும் அடங்குவர்.