வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் குற்றப்பின்னணிகள் தொடர்பாக 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தொடர்பான தகவலை வெளியிடும்படி 2018-ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களில் அபாயகரமான அளவு உயர்ந்திருப்பதாக கூறிய நீதிபதிகள், குற்றப்பின்னணி வேட்பாளர்களை தேர்வு செய்தது ஏன்? அவர்களின் பெயர்களை வெளியிடாதது? என்பதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் குற்றப்பின்னணிகள் தொடர்பாக 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

‘வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அரசியல் கட்சிகள் தங்களது இணையதளங்கள், பிராந்திய நாளேடுகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும். கட்சிகள் தெரிவிக்காவிடில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி கூறவேண்டும்’ என நீதிபதிகள் கூறினர்.