தெலங்கானா விபத்துக்கு வேகத்தடையே காரணம்

தெலங்கானா விபத்துக்கு வேகத்தடையே காரணம்

தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள ராம்சாகர், சனிவாரம் பேட்டா, பெத்தபல்லி, ஹிம்மத் பேட்டா ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பெண்கள், முதியோர் ஆகியோர் கொண்டகட்டு பகுதியில் இருந்து ஜகித்யாலாவுக்கு அரசு பேருந்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை சென்றுக்கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தில் கொண்டகட்டு பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் பயணம் செய்தனர்.இதில் 80 பயணிகள் சென்றதால், பலர் நின்று கொண்டு பயணம் செய்ய நேரிட்டது.

அப்போது, கொண்டகட்டு மலைப்பகுதில் இருந்து வரும் வழியில், கடைசி வளைவில் வந்த போது, அங்கிருந்த வேகத்தடை மீது பேருந்து வேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் 4 முறை புரண்டு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தின் காரணமாக பலத்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, பேருந்தில் பயங்கர மரண ஓலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், தாங்களாகவே ஓடிச் சென்று, பேருந்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த பேருந்தின் முன் பாகம் பயங்கரமாக சேதமடைந்தது. பலர் பேருந்தில் இருக்கைகளுக்கிடையே சிக்கி உயிரிழந்திருந்தனர்.