ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் மனைவியின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கணவர்...

 ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் மனைவியின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கணவர்...

வட மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் சடலங்களை கையில் சுமந்தபடியே பல கிலோ மீட்டருக்கு கொண்டு செல்வதும், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. மருத்துவமனைகளிலும் ஸ்ட்ரெட்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நோயாளிகள் இழுத்து செல்லப்படுவதும் தரையில் படுக்க வைப்பதும் தொடர் கதையாகியுள்ளது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் ஹரிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹாயாலாலின் மனைவி சோனி. இவருக்கு திடீரென்று கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மைன்புரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சோனியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல கன்ஹாயாலால் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததாக தெரிகிறது. 

இதையடுத்து கன்ஹாயாலால், ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மனைவி சோனியின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றார். கொளுத்தும் வெயிலில் வயதான தாயாரையும் அமர வைத்து அவர் தள்ளிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதை பார்த்த பலரும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.