ஆதார் கேஸ்: பத்திரிக்கைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளோம் - மத்திய அரசு

ஆதார் கேஸ்: பத்திரிக்கைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளோம் - மத்திய அரசு

புதுடெல்லி:ஆதார் தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகள் எழும்போது எல்லாம் மத்திய அரசு பாதுகாப்பாக உள்ளது என கூறிவருகிறது. இதற்கிடையே தகவல்கள் திருடப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் ரூ.500 கொடுத்தால் போதும் 119 கோடிக்கும் கூடுதலான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் கிடைக்கும் என்பதை 'தி டிரிப்யூன்' ஆங்கில இதழ் புள்ளி விவரங்கள் மற்றும் விளக்கங்களுடன் செய்தியை வெளியிட்டது. 


இது குறித்து ஆதார் ஆணைய (உடாய்) துணை இயக்குனர் பி.எம்.பட்நாயக் டெல்லி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பத்திரிக்கையின் செய்தியாளர் ரச்னா கைய்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் பத்திரிக்கையாளர் மீது வழக்கை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதில் உறுதிபாடான நிலையில் உள்ளோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய அரசு அடையாளம் தெரியாத நபருக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,பத்திரிக்கைகளுக்கு அரசு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.