கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை...!

  கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை...!

கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிக்கு மே 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி தொகுதியில் தேர்தல் ரத்தானது. இதை தொடர்ந்து 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.இதில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ், பாஜ கட்சி மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

இறுதியில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கர்நாடக தெற்கு மாவட்டங்களில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, ஹூப்பள்ளி மாவட்டம் பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவினார். பாதாமியில் வெற்றி பெற்றார். ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக தலைவர் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

பாஜக பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் 7 நாள் அவகாசம் அளித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றன.காலை 10.30 மணிக்கு கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வரும் நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.