இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.. திலீப்புக்கு கிடைக்கப்போவது ஜெயிலா, பெயிலா?

 இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.. திலீப்புக்கு கிடைக்கப்போவது ஜெயிலா, பெயிலா?

திருவனந்தபுரம்: திலீப்பின் ஜாமீன் மனு மீது இன்று அங்கமாலி நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது சிறைவாசம் தொடருமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் நடிகர் திலீப்பை ஆலுவா காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திலீப்பை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர்.

ஆனால் நீதிமன்றம் 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கியது. இதையடுத்து திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திரிச்சூர், எர்ணாக்குளம் உள்ளிட்ட இடங்களுக்கும் திலீப்பை போலீசார் அழைத்து சென்றனர்.திலீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திலீப்புக்கு அளிக்கப்பட்ட போலீஸ் கஸ்டடி இன்று காலை 11 மணியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர் மீதான ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.இதனிடையே பாவனா கடத்தல் தொடர்பாக திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன், அவரது தாயார் ஷியாமளா, மற்றும் எம்எல்ஏ தாமஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.