காஷ்மீர்: பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

காஷ்மீர்: பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர்.பாதுகாப்புப்  படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்' என்றார்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10.30 மணியளவில் பூஞ்ச் மாவட்டம், மெந்தர் பகுதியில் உள்ள டேப்ராஜ், கிருஷ்ணா காட்டி, இஷாப்பூர் ஆகிய எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக ஜம்முவில் இருந்து இன்று பிற்பகல் வெளியான ராணுவ வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.