ஜல்லிக்கட்டுக்கு அரசால் எதுவும் செய்ய முடியாது: மத்திய அமைச்சர்

ஜல்லிக்கட்டுக்கு அரசால் எதுவும் செய்ய முடியாது: மத்திய அமைச்சர்

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அரசால் எதுவும் செய்ய இயலாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2 நாளில் தீர்ப்பளிக்க இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசால் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றார். காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

மக்களின் உணர்வுகளை நீதிமன்றம் மதிக்கும் என்று நம்புகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்போரிடமும், எதிர்ப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்று கூறி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.