மனைவி மைனராக இருக்கும் பட்சத்தில் அவருடனான பாலுறவு பலாத்காரமாகும்: உச்ச நீதிமன்றம்

மனைவி மைனராக இருக்கும் பட்சத்தில் அவருடனான பாலுறவு பலாத்காரமாகும்: உச்ச நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 375-ல் சர்ச்சைக்குரிய உட்பிரிவு 2- ஆனது, ஒரு ஆண் தனது மனைவிக்கு 15-வயது ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்ள அனுமதிக்கிறது.ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ (POCSO) 18 வயது கீழ் உள்ள அனைவரையும் குழந்தைகள் எனக் குறிப்பிடுகிறது.

அப்படி இருக்கும்போது சட்டப்பிரிவு ஐபிசி 375 (2) 15 வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் ஒரு கணவர் உறவு கொள்வதை அனுமதித்தால் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் மைனர்களுக்கு சட்டத்தில் சமத்துவம் அளிக்காத நிலையை உருவாக்கும் என்றும் 'இண்டிபெண்டன்ட் தாட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவரது கணவரே பாலுறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று 'இண்டிபெண்டன்ட் தாட்' தொண்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை, விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.இதனையடுத்து, மனைவி மைனர் பெண்ணாக அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.