கொல்லப்பட்ட காவலர் குடும்பத்தினரை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்

கொல்லப்பட்ட காவலர் குடும்பத்தினரை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது.

புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை தவிர்த்து 20 வயது இளைஞர் ஒருவரும் சுடப்பட்டு உயிரிழந்திருந்தார். 

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சுபோத் குமாரின் குடும்பத்தினரை சந்தித்த  முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சுபோத் குமார் சிங் மனைவி மற்றும் 2 மகன்கள் ஆகியோர் லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தனர். 

இந்த சந்திப்புக்கு பிறகு, காவலரின் மகன் முன்னிலையில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவல்துறை இயக்குநர் ஒபி சிங், “  உத்தர பிரதேச அரசு உங்களுடன் இருப்பதாக காவலரின் குடும்ப உறுப்பினர்களிடம் முதல் மந்திரி கூறினார். மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என முதல் மந்திரி உறுதி அளித்தார்” என்றார்.