ரூ.71 லட்சம் முறைகேடு...வங்கி அதிகாரி கைது

ரூ.71 லட்சம் முறைகேடு...வங்கி அதிகாரி கைது

புதுடெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு மாற்றிக் கொடுத்ததில் ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக வங்கி அதிகாரி ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

செல்லாத ரூபாய் நோட்டு மாற்றிக் கொடுத்ததில் ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக வங்கி அதிகாரி ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 2 தொழில் அதிபர்களும் சிக்கினர்.கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு ரூபாய் நோட்டு மாற்றிக்கொடுக்கப்பட்டதில் சில இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் வந்ததையடுத்து, சி.பி.ஐ. விசாரணையில் இறங்கியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பசவனகுடி கிளையில் மூத்த கிளை மேலாளராக இருந்தவர் லட்சுமிநாராயணா. இவர் போலி ஆவணங்கள் மூலமாக 2 தொழில் அதிபர்களுக்கு ரூ.71 லட்சம் மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வரைவோலைகளாக மாற்றிக்கொடுத்து உள்ளார். பின்னர், அந்த வரைவோலையை அவர்கள் பணமாக மாற்றிக்கொண்டனர். இதன்மூலமாக தங்களிடம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை 2 தொழில் அதிபர்களும் மாற்றி உள்ளனர். இதற்கு அதிகாரி உடந்தையாக இருந்துள்ளார்.

இதனையடுத்து வங்கி அதிகாரி உள்பட 3 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை யடுத்து 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.இதற்கிடையே நாடு முழுவதும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட 50 வங்கிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக சோதனை நடத்தினர்.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள குறிப்பிட்ட தனியார் மற்றும் அரசு வங்கி கிளைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது ஆடிட்டர்களும் உடனிருந்தனர். கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பிறகு நடைபெற்ற வங்கி பண பரிவர்த்தனைகள் இந்த சோதனையின்போது ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.டெல்லியில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 தனியார் வங்கி மேலாளர்கள் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராஜீவ் குஸ்வாலா என்ற ஆடிட்டர் நேற்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.