மத்திய அமைச்சரை வரவேற்ற யானை கோர்ட்டில் ஆஜர்

 மத்திய அமைச்சரை வரவேற்ற யானை கோர்ட்டில் ஆஜர்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில்  இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். அவரை வரவேற்க யானை வரவழைக்கப்பட்டதால் சர்ச்சை உருவாகி வழக்கானது. இது தொடர்பான வழக்கில் யானை இன்று கோர்ட்டில் ஆஜராகிறது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்து அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை அழைக்கப்பட்டார்.அழைப்பை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்க ஸ்ரீரங்கத்தில் இருந்து யானை ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்த யானை அலங்கரிக்கப்பட்டு மத்திய அமைச்சர் வரும் போது வரவேற்க தயாரானது. 

பின்னர், அமைச்சர் வரும் போது, யானை வரவேற்றது. ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானைக்கு நீண்ட நேரம் உணவு கொடுக்காமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். மேலும், இந்து அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் யானை பயன்படுத்துவதற்குரிய முறையான ஆவணங்கள் எதையும் அவர்கள் வைத்திருக்கவில்லை. இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட கால்நடை துயர் துடைப்பு கழகத்தின் நிர்வாகி தியாகராஜன் விலங்கு நல அமைப்பினரிடம் புகார் ஒன்றை அளித்தார். இதன் அடிப்படையில் அவர்கள் யானையை மீட்டனர். பின்னர், யானை பாகனிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, யானை பாகனிடம் தேனாம்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கொண்டு செல்வதற்கான ஆவணம் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, யானை மீட்கப்பட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை துயர் துடைக்கும் கழகத்தில் கட்டி வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி வனவிலங்கை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கு இன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் இறுதியில், யானை பாகனுடன் அனுப்பப்படுமா அல்லது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுமா என்பது தெரிய வரும்.