பச்சிளம் குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது

பச்சிளம் குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் பச்சிளம் குழந்தையை விற்றதாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கீழப்பாவூர் நேரு நகரைச் சேர்ந்த தங்கம் மகன் அருணாசலம் (35). இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனராம். இதற்காக அதே ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் நயினார் (48) என்பவரை அணுகினராம். அதற்கு, ஒரு குழந்தையை தருவதாகவும் அதற்கு ரூ.2.50 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் நயினார் கூறினாராம். தொகையைப் பெற்றுக் கொண்ட அவர், பிறந்து 4 தினங்களேயான ஆண் குழந்தையை தம்பதியிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் குழந்தையை முறைப்படி தத்து எடுத்ததற்கான ஆவணங்களைக் கொடுக்க நயினார் காலம் தாழ்த்தி வந்தாராம். இதையடுத்து அருணாசலத்துக்கும் நயினாருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன், அருணாசலத்தை ஆலங்குளத்துக்கு வருமாறும், அங்கு வைத்து தத்து ஆவணங்கள் தருவதாகவும் நயினார் கூறியுள்ளார். ஆனால், அப்போதும் முறையான ஆவணங்களை நயினார் கொடுக்காததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

இதையடுத்து, நயினார் மீது ஆலங்குளம் போலீஸில் அருணாசலம் சனிக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில், ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் வழக்குப் பதிவு செய்து நயினாரை கைது செய்தார். விசாரணையில், கடையநல்லூர் ஜிந்தா மாதர் மனைவி எஸ்தர் (47) என்பவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொடுத்ததாகக் கூறியதன் பேரில் அவரையும் ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், ஆலங்குளம் ஆர்சி சர்ச் தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம் (55), தென்காசி வட்டம், சிவநாடானூர் சுப்பிரமணியன் மகன் தங்கப்பாண்டி (57), மேலபட்டமுடையார்புரம் தவசிமுத்து மகன் பாலசுப்பிரமணியன் (47), கீழப்பாவூர் சுடலையாண்டி மகன் சேர்மன் (49), சாம்பவர் வடகரை பிள்ளை பெருமாள் மனைவி பொன்னுத்தாய் (67) ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை, ஆலங்குளம் விடியல் சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே ஈரோட்டில் இருந்து குழந்தை ஒன்று கடத்தி வரப்பட்டு நாகர்கோவிலில் கொடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அந்தக் கும்பலுக்கும் ஆலங்குளம் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க, ஆலங்குளம் போலீஸார் நாகர்கோவில் சென்றுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுது:கைதானவர்களில் ஒருவரான தங்கப்பாண்டி, சிகிச்சைக்காக அடிக்கடி தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த பொன்னுத்தாய், எஸ்தர் ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் குழந்தை குறித்து பேசும்போது, கடையநல்லூரைச் சேர்ந்த செல்வி என்பவர் தனக்கு பிறந்த குழந்தையை ரூ. 50 ஆயிரத்துக்கு தருவதாகக் கூறியதையடுத்து, பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிய பின்னர், இரு தினங்களிலேயே அந்தக் குழந்தையை அருணாசலத்திடம் ஒப்படைத்துள்ளனர்.ஆனால் அருணாசலம் தனக்கு முறைப்படி தத்து ஆவணங்களை தருமாறு கேட்டதால், சுரண்டை பேருந்து நிலையத்தில் வைத்து மேலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், பின்னர் வழக்குச் செலவுக்கென ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.50 லட்சத்தை அருணாசலத்திடமிருந்து நயினார் வாங்கியதாகவும் தெரிகிறது. ஆனால், முறையான ஆவணங்களை நயினார் தராததால், அருணாசலம் புகார் அளித்துள்ளார்.