ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை...போலீசார் விசாரணை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை...போலீசார் விசாரணை

வேலூர்: வேலூரில் மின்வாரிய துறை அதிகாரி, மனைவி, மகள் கொலை செய்யப்பட்டதற்கு அவரின் மகனே காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை கிராமத்தில் மின்வாரிய துறை அதிகாரி மோகன்(52), அவரது மனைவி ராஜேஸ்வரி(47), மகள் சுகன்யா(23) ஆகியோர் வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். படுகாயம் அடைந்து மயக்க நிலையில் கிடந்த மோகனின் மகன் தமிழரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்கம் தெளிந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதிகாலை 3.30 மணிக்கு சிறுநீர் கழிக்க சென்ற தன்னை யாரோ கத்தியால் குத்தியதாகவும், உடனே தான் மயங்கிவிட்டதாகவும் தமிழரசன் தெரிவித்துள்ளார். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற மோகன் காலை 6 மணிக்கு தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை 7.30 மணிக்கு பால்காரர் வந்து அழைத்தும் யாரும் வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தான் கொலை நடந்தது தெரிய வந்தது.தமிழரசன் சொல்வதுபடி பார்த்தால் கொலையாளி 3.30 மணிநேரம் காத்திருக்க வேண்டும். அதனால் தமிழரசனே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோகனுக்கும் அவரது பங்காளி ஒருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதில் அவர் உங்களை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.இந்த கொலைகளுக்கு பங்காளி தகராறு காரணமா அல்லது தமிழரசனின் வேலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.