புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட ‘மொய் விருந்து’நடத்திய அமெரிக்க தமிழர்கள்!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட ‘மொய் விருந்து’நடத்திய அமெரிக்க தமிழர்கள்!

‘மொய் விருந்து’ புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பிரபலமானது. வறுமையில் வாடும் குடும்பத்துக்கு உதவவும், அவர்களுக்கு பணம் திரட்டி கொடுக்கவும் உறவினர்களால் நடத்தப்படுவது மொய் விருந்து. ஊரில் ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து ஆடு, கோழி கறியுடன் விருந்து நடத்துவார்கள். இதில் கலந்துகொள்ள ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

விருந்தில் கலந்துகொள்கிறவர்கள் தாராளமாக பணத்தை மொய்யாக வழங்குவார்கள். விருந்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு செல்லும் வழக்கமும் முன்பு இருந்தது. இந்த விருந்தில் வசூல் ஆகும் மொய்பணம் முழுவதும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் வழக்கம் இன்றைக்கும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் உள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் மிகுந்த மனவேதனை அடைந்த அமெரிக்க வாழ் தமிழர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்த நினைத்தனர். இதையடுத்து அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான சைவ, அசைவ உணவுகள் விருந்தாக அளிக்கப்பட்டது. மொய் விருந்தில் கலந்துகொண்ட அனைவரும், சாப்பிட்ட பின் மொய் எழுதினர். இதில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் வசூலானது.

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாமினி கூறுகையில், ‘இந்த மொய் விருந்து நிகழ்ச்சியில், வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இங்கு வந்து விருந்து சாப்பிட்டு தாராளமாக மொய் வழங்கிய அனைவருக்கும் நன்றி’ என்றார்.முனைவர் பூங்குழலி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிகழ்வாக இது இருந்தாலும், தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கு வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளி என இந்தியர்களாக ஒன்று கூடியது மனிதநேயத்தை காட்டியது’ என்றார்.

மொய் விருந்து மூலம் கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெருவிளக்குகளை அமைக்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.