அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3பேர் பரிதாப பலி

அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3பேர் பரிதாப பலி

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு, கிறிஸ்தவ  பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

 இவரது குழந்தைகள் சுவாதிகா நாயக், சுஷான் நாயக், ஜெயா சுஜித் ஆகியோர் அமெரிக்காவின் டென்னெசீ மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரென்ச் கேம்ப் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தனர்.குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் என்ற பெண்ணுக்கு சொந்தமாக கோலியர்வில்லி பகுதியில் உள்ள வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக இவர்கள் மூவரும் சென்றிருந்தனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கடந்த 24-ம் தேதி அந்த வீட்டை அலங்கரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சிறிய மின்விளக்குகளை அமைக்கும் வேலையில் அங்கிருந்த 3 பேருடன் தெலுங்கானாவில் இருந்து சென்றுள்ள பிள்ளைகளும் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட மின்சார கசிவால் அந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென்று தீபிடித்து எரிந்தது. இதை அறியாத பிள்ளைகள் வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் மளமளவென பரவிய தீ வீட்டின் நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டது.

இதனால் வெளியேற வழியின்றி வீட்டிக்குள் சிக்கிகொண்ட சுவாதிகா நாயக்(16), சுஷான் நாயக்(14), ஜெய சுஜித்(14) ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரான அமெரிக்கப் பெண் காரி கோட்ரியெட்டும் இந்த விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரி கோட்ரியெட்டின் கணவர் டானி மற்றும் அவரது மகன் கோலே ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.