வைஷ்ணவ தேவி ஆலயத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் செல்ல தடை!

வைஷ்ணவ தேவி ஆலயத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் செல்ல தடை!

புதுடெல்லி: காஷ்மீர் மலைப்பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது.வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்,குறிப்பாக, ஒன்பதுநாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையையொட்டி இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. அவ்வகையில், வரும் பக்தர்களின் சரக்குகளையும், சில வயதான பக்தர்களையும் மலையடிவாரத்தில் இருந்து ஆலயத்துக்கு கொண்டு செல்ல கழுதைகளும், கோவேறு கழுதைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பகுதியில் இந்த பிராணிகளால் உண்டாகும் மாசினால் பக்தர்களின் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், குறுகிய பாதை வழியாக நடந்து செல்லும் வயது முதிர்ந்த பக்தர்களின் உயிருக்கு சிலவேளைகளில் அபாயம் நேரிடலாம் என்றும் சமூக ஆர்வலரான கவுரி மவுலேகி என்பவர் புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதுதொடர்பாக, உரிய விளக்கம் அளிக்குமாறு ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுக்கு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுதந்தர் குமார் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்கள் மற்றும் பேட்டரியால் இயங்கும் கார்கள் செல்வதற்காக 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பாதை வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் செயல்பட தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் இதுதொடர்பான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த பாதையில் கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகள் செல்ல அனுமதிக்க கூடாது. இதேபோல், பழைய பாதையில் இருந்தும் கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் பயன்பாட்டை படிப்படியாக நீக்க வேண்டும்.

ஆலய வளாகத்தின் கொள்ளளவை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் செல்ல அனுமதிக்க கூடாது. கூடுதலாக வரும் பக்தர்களை அர்துக்வாரி மற்றும் கத்ரா நகர் பகுதியில் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மறுநாள் தரிசனத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி சுதந்தர் குமார் உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஆலய வளாகத்தை சுற்றியுள்ள பாதைகள் மற்றும் கத்ரா நகரில் உள்ள பஸ் நிலையம் பகுதியில் குப்பைகளை போட்டு மாசுப்படுத்தும் நபர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்குமாறும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.