பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தைப்பூச வழிபாடு

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தைப்பூச வழிபாடு

பழனியில் தைப்பூசத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.கடந்த சில நாட்களாகவே மதுரை, ராமநாதபும், தேனி, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விதவிதமான காவடி எடுத்து ஆடிப்பாடி பாதயாத் திரையாக கோவிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் வந்திருந்தனர்.

தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பழனி நகரில் திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பழனிமலை அடிவாரப்பகுதி முதல் திருஆவினன்குடி கோவில் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.மேலும் கிரி வீதி முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன. பழனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கூட்ட நெரிசலை தவிர்க்க ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டிருந்தது. திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக பழனி அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டிருந்தது.தைப்பூச திருவிழாவையொட்டி இன்று அதிகாலை முத்துக்குமாரசாமி வள்ளிதெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி சண்முக நதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏராளமான பக்தர்கள் சண்முக நதியில் நீராடி சாமி தரிசனம் செய்து தீர்த்தம் பெற்றனர். இதனால் சண்முக நதியிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விழாவின் மற்றொரு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.