பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா

பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கடந்த 4ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கஜமுஹாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கடந்த 6ஆம் திருநாளில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சதுர்த்தி விழாவின் முத்தாய்ப்பாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம் மாலை 4.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மேலதாளத்துடன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இங்கு உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலினர். தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர்.

தேர் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. தொடர்ந்து விநாகயருக்கு வருடத்திற்கு ஒருமுறை சாத்தப்படும் சந்தன காப்பு சாத்தப்பட்டு மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 10 ஆம் நாளான நாளை சிகர விழாவான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதை தொடர்ந்து 16 படி அரிசியில் ராட்சத கொலுக்கட்டை தயார் செய்து விநாயகருக்கு படைக்கப்பட்டு பின் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.