அமர்நாத் குகைக்கோவில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக ரத்து...!

 அமர்நாத் குகைக்கோவில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக ரத்து...!

காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 141 கி.மீ. தூரத்தில் பிரபல அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இங்கு குளிர்காலத்தின்போது, இயற்கையாக பனி லிங்கம் உருவாகும். இதை நாடு முழுவதிலும் இருந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் தரிசித்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அமர்நாத் குகைக் கோவிலை பாதுகாக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கில், பனி லிங்கம் முன்பாக பக்தர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் குகைக்கோவில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீதிபதிகள் முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.