நாளை ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் குவியும் பக்தர்கள்

நாளை ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் குவியும் பக்தர்கள்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 

இன்று (வெள்ளிக்கிழமை) 7-ம் நாள் திருவிழாவில் சாமி, அம்பாள் காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கிலும், மாலை 4.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி மண்டகப்படிக்கு சென்று, இரவு 8 மணிக்கு கோவிலை வந்தடைகின்றனர். நாளை (சனிக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 8.50 மணிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேசுவரம் கோவிலில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளு கின்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆடி அமாவாசை, திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை தக்கார் குமரன் சேதுபதி, கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.