7 சிறுமிகளை தெய்வங்களாக வழிபடும் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா

7 சிறுமிகளை தெய்வங்களாக வழிபடும் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா

மேலூரை அடுத்த வெள்ளலூரை தலைமையிடமாக கொண்டும், அதன் சுற்று பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டும், அதை வெள்ளலூர்நாடு எனவும் இந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிகாரர் சாமியும், ஏழைகாத்த அம்மனும் இந்த பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழாவாக ஏழைகாத்த அம்மன் கோவில் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளலூரில் கோவில் வீடும், 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவில்பட்டியில் ஏழைகாத்தம்மன் கோவிலும் உள்ளன. திருவிழாவையொட்டி 7 சிறுமிகளை அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கும் முதல் நாள் விழா நேற்று வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில் வீட்டின் முன்பு நடைபெற்றது.

அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்படும் தேர்வில் கலந்துகொள்ள 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புத்தாடைகள் உடுத்தி அம்மன் தெய்வங்களைப் போல அலங்கரித்து பெற்றோர்களுடன் வந்திருந்தனர். இவர்களில் ஒரே வயது மற்றும் உயரம் உள்ள 7 சிறுமிகளை கோவில் பூசாரி தேர்வு செய்தார். பின்னர் அந்த சிறுமிகள் அனைவரும் கோவில் வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருவிழா முடியும் வரை, வீடுகளுக்கு செல்லாமல் வெள்ளலூர் கோவில் வீட்டிலே தங்கி, சுற்று பகுதி கிராமங்களுக்கு சென்று கிராம மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். 

நேற்றிலிருந்து 15 நாட்களுக்கு இந்த பகுதி மக்கள் பழமையான கட்டுப்பாடுகளுடன் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அவர்கள் அசைவ உணவு சமைக்காமலும், சமையலில் எண்ணெய்யை உபயோகிக்காமலும் இருப்பார்கள். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களும் இந்த விரத முறையை கடைபிடித்து வருகின்றனர்.