கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறப்பு  நேரம் அதிகரிப்பு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறப்பு  நேரம் அதிகரிப்பு

கன்னியாகுமரியில் முக்கிய சீசன் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவார்கள். பின்னர், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.மேலும், டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, ஜனவரி மாதம் பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இதைதொடர்ந்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக வருகிற 17-ந் தேதி முதல் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பகல் 12.30 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும்.

வருகிற 17-ந் தேதி முதல் பகல் 12.30 மணிக்கு மாறாக 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதுபோல், இரவு 8.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன்மூலம் கோவில் நடை கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.