காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாட்டம்

 காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாட்டம்

தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்குகளை கட்டியது.
திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன. கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, திருக்காட்டுப் பள்ளியிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூரில் ஆடிப்பெருக்கு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர். 

புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொரு வர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டிகையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச் சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்தி ரம், முசிறி, முக்கொம்பு காவிரி ஆற்றிலும் ஆடிப்பெ ருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பவானி கூடுதுறையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். 3 நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கூடுதுறைக்கு இன்று புதுமணத் தம்பதிகள் ஜோடி ஜோடியாக வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி மணமாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டி வழிபட்டனர். பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி படித்துறையில் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கட்டும் என வேண்டி வழிபட்டனர்.

இப்படி பலதரப்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து இருந்ததால் பவானி நகர், மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர். 

புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.