சபரிமலையில்  மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா, பிந்து கோரிக்கையால் பதற்றம்

சபரிமலையில்  மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா, பிந்து கோரிக்கையால் பதற்றம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்படுகிறது. மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.


இந்த சூழலில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்போது மீண்டும் தரிசனம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கனக துர்காவும், பிந்துவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை பூஜைகள் தொடங்க சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 17-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.சபரிமலை கோயிலுக்கு மீண்டும் செல்ல பிந்துவும், கனகதுர்காவும் அனுமதி கோரியுள்ளதால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.