சபரிமலையில் 144 தடை 8-ம் தேதி வரை நீட்ட உத்தரவு

சபரிமலையில் 144 தடை 8-ம் தேதி வரை நீட்ட உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வரும் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கு கோயில் திறந்திருக்கும். இதையடுத்து, சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்தத் தடை நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வர இருந்தது. இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை வரும் 8-ம் தேதி வரை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் நேற்று முன்தினம் இரவு உத்தர விட்டார்.