சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந் தேதி திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந் தேதி திறப்பு

சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

அன்றைய தினம் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோவிலின் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மறுநாள் (13-ந் தேதி) காலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜையும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன.