ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது...திரளான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது...திரளான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் இன்று அதிகாலை, 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்த போதிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி முதல் தொடங்கிய பகல் பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.பகல் பத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் பெண்ணாசையை துறக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு நினைவூட்டும் வகையில் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து விருச்சிக லக்கினத்தில் புறப்பட்டார்.
பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அந்த வழியாக நம்பெருமாள் வந்தபோது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் கோ‌ஷம் எழுப்பினர்.

சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணிக்கு காட்சி அளித்தார். 6.15 மணிக்கு மரியாதையை நம்பெருமாள் ஏற்றுக் கொண்டார்.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு, திருநாவுக்கரசர் எம்.பி., அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் வரதராஜூ, மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் வேதரத்தினம், மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், ஜவகர்லால் நேரு, ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து காலை 7.15 மணிக்கு ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமா மணி ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அங்கு 8.15 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்பட்டது.தொடர்ந்து இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நாளை (7-ந்தேதி) அதிகாலை 12.45 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மூலவரை முத்தங்கி சேவையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் வரிசையாக செல்வதற்கு வசதியாக சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் இரவு முழுவதும் காத்திருந்து சொர்க்க வாசலை கடந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கோவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து பிரகாரங்களிலும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. மேலும் தங்க கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பாதுகாப்பிற்காக 4 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வருகிற 15-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 12-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக் கும். 12-ந்தேதி திருமங்கை மன்னர் வேடுபறி நிகழ்ச்சி யன்று பரமபதவாசல் திறக் கப்படாது. மீண்டும் 14-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 15-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நேரங்களில் பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து செல்லலாம்.15-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.