திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

 
மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

7-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

8-ம் நாளான 4-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும். 9-ம் நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ம் நாளான 7-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12-ம் நாளான 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.