திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.1 கோடி செலவில் கோவில் திருப்பணி நடந்தது. கோவிலில் வர்ணங்கள் பூசப்பட்டன. சிலைகள் புதுப்பிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து 802 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 8-ம் காலயாக பூஜை நடைபெற்றது. யாக குண்டங்களில் இருந்து புனிதநீர் கலசங்களை கோபுரத்துக்கு எடுத்து சென்றனர்.

காலை 9.18 மணிக்கு ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள 3 நிலை கோபுரங்களில் உள்ள அனைத்து கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

விழாவையொட்டி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் சுற்றுபுற வளாகங்களில் 125 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தியும், 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.காரைக்காலுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.