சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டம் மீண்டும் தாமதம்...

சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டம் மீண்டும் தாமதம்...

தகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம்.சந்திரனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுமொரு பாகம் 2017-2018 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என முன்னரே இஸ்ரோ அறிவித்திருந்தது.அதன்படி அதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. தற்போது ஓரளவு இந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்த நிலையில் 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

நிலவின் பரப்பு, சந்திரகிரகணம் உள்ளிட்டவை குறித்த தகவல்களைச் சேகரிக்க முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திராயன்-2 ஏவுகணை சுமார் 3,290 கிலோ எடை கொண்டது. நிலவின் சுற்றுப்பாதையில் இதை நிலைநிறுத்தி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக் கெட் மூலம் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த IRNSS-1H செயற்கைகோள் முயற்சியும் சற்று பின்னடைவை சந்தித்தது.இதற்கிடையில், நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாகவும் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வெற்றிகரமான சந்திராயன்-1, மங்கள்யான்-1 திட்டத்துக்கு பின்னர் இரண்டுமுறை சிறிய பின்னடைவை இஸ்ரோ இருமுறை எதிர்கொண்டுள்ளதால் மிகுந்த சரிபார்ப்புக்கு பின்னர் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அக்டோபர் மாதம் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக, வரும் ஜனவரி மாதத்துக்குள் சந்திராயன்-2 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது.