சந்திரயான்-3 ஓராண்டிற்குள் விண்ணில் அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-3 ஓராண்டிற்குள் விண்ணில் அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோவில் 2 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டும். ‘ககன்யான்’ திட்டப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு 15 மாத பயிற்சிக்காக ரஷ்யா சென்றுள்ளனர். ஓராண்டில் ‘ரோபோ’ உள்ள விண்கலம் முதலில் அனுப்பப்படும். அதன்பின்னர் அடுத்த 6 மாதத்தில் ஆள் இல்லாத விண்கலமும், அதன்பின்னர் மனிதர்களை கொண்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல் ‘சந்திரயான்-3’ திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதையும் ஓராண்டிற்குள் விண்ணில் அனுப்ப திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இஸ்ரோவிற்கான விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகள் இப்போது தொடங்கவில்லை. ‘ககன்யான்’ திட்டப்பணி முடிந்தபின்னர் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.மீனவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டு தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் குறைகள் இருப்பதாக தெரிவித்தால் அதில் மாற்றம் செய்யப்படும். இதுவரை அதுபோல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.