நிலவில் விழுந்து நொறுங்கிய இஸ்ரேல் விண்கலம்...

நிலவில் விழுந்து நொறுங்கிய இஸ்ரேல் விண்கலம்...

நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம் பெரஷீட் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம்,  2 மாதங்களாக பூமியைச் சுற்றிவந்த நிலையில், அதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. நேற்று இரவு நிலவில் தரையில் இறங்கும் நேரத்தில், விண்கலம் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இந்த விண்கலம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்தின் பொது மேலாளர் ஓபர் டோரன் கூறியதாவது:

நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக, தனியார் நிறுவனத்தின் நிதி உதவியோடு அனுப்பப்பட்ட முதல் லூனார் விண்கலமாகும். இந்த விண்கலம் நிலவின் மேலடுக்கில் குறிப்பிடப்பட்ட இடத்தில் விழுந்து பல துண்டுகளாக நொறுங்கியது. இந்த விண்கலம் நிலவை அடையும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் விழுந்துள்ளது. அந்த விண்கலம் நிலவில் இறங்க அதிவேகமாக சென்றுள்ளது. அதனால் இவ்வாறு நடந்திருக்கக்கூடும். 

இருப்பினும் இந்த விண்கலம் தோல்வி அடைந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளே இருக்கும் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அதுவே இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாகும். இது விஞ்ஞானிகளுக்கு வருத்தமளித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விண்கலம் நிலவில் தரையிறங்கும் அரிய காட்சியை ஒளிபரப்ப இஸ்ரேல் நாட்டின் பிரபல ஊடகங்கள் தயாராக இருந்தன. குழந்தைகளும் சிறப்பு  விண்வெளி வீரர்களுக்கான வெள்ளைநிற சீருடை அணிந்து இந்த நிகழ்வைக் காண ஆர்வத்துடன் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.