2-வது டி20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி...!

2-வது டி20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி...!

ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - தவான் ஜோடி 9.2 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.

அடுத்து தவான் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். தவான் 31 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 8 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியா 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரிஷப் பந்த் 28 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், எம்எஸ் டோனி 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 1-1 என சமநிலை செய்தது. 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.