உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று துவக்கம்- ரஷியா-சவுதிஅரேபியா மோதல்

 உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று துவக்கம்- ரஷியா-சவுதிஅரேபியா மோதல்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் நெய்மார் (பிரேசில்), தாமஸ் முல்லர், மெசூத் ஒசில் (ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ஆன்டோன் கிரிஸ்மான் (பிரான்ஸ்), எடன் ஹசார்ட் (பெல்ஜியம்), எடிசன் கவானி (உருகுவே), ஹாரி கேன் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), இனியஸ்டா, டேவிட் சில்வா (ஸ்பெயின்), ராபர்ட் லெவான்டாவ்ஸ்கி (போலந்து) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முத்திரை பதிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

உலக கோப்பை போட்டியில் 4-வது முறையாக ஆடும் ரஷியா உலக தரவரிசையில் 70-வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ரஷியா தான். கடைசியாக விளையாடிய 6 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட (2 டிரா, 4 தோல்வி) ஜெயிக்கவில்லை. இதில் இருந்தே ரஷிய அணியின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகோர் அகின்பீவ் தான் பிரதான அஸ்திரமாக இருக்கிறார். அனுபவம் வாய்ந்த அவருக்கு எதிராக எதிரணிகளால் கோல் அடிப்பது எளிதான காரியம் அல்ல. பெனால்டி வாய்ப்புகளை கிட்டத்தட்ட 30 சதவீதம் வெற்றிகரமாக தடுத்து இருக்கிறார். மற்றபடி ஜாகோவ், பெடோர் ஸ்மோலோவ் முக்கியமான வீரர்களாக விளங்குகிறார்கள்.

ரஷிய அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை போட்டி இரண்டிலும் ரஷியா முதல் சுற்றை தாண்டவில்லை. உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றுடன் வெளியேறியது 2010-ம் ஆண்டில் (தென்ஆப்பிரிக்க அணி) மட்டுமே நடந்துள்ளது. அந்த வரிசையில் ரஷியா இணையாமல் இருந்தாலே ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.

5-வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் சவுதிஅரேபியா அணி தரவரிசையில் 67-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் கண்டுள்ளது. இதில் கடந்த வாரம் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் சவுதிஅரேபியா முழு உத்வேகத்துடன் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததும் அடங்கும். ஜெர்மனிக்கு எதிராக ஆடிய விதம் சவுதிஅரேபியா அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

2002-ம் ஆண்டுக்கு பிறகு ரஷியா உலக கோப்பையில் வெற்றி பெற்றதில்லை. சவுதி அரேபியா உலக கோப்பையில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகி விட்டது. தங்களது நீண்ட கால ஏக்கத்துக்கு விடைகொடுக்கும் அணி எது என்பதை பொறுத்திருந்து ரசிப்போம். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளிக்க இருக்கிறார். கலைஞர்களின் நடனத்தை தவிர, ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெறுகிறது.