நிதாஹாஸ் முத்தரப்பு டி20 தொடர்- இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

 நிதாஹாஸ் முத்தரப்பு டி20 தொடர்- இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, குசால் மெண்டிஸ் களம் இறங்கினார்கள்.முதல் இரண்டு ஓவரில் 24 ரன்கள் அடித்தது இலங்கை. 3-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் 8 பந்தில் 17 ரன்கள் சேர்த்த குணதிலகா அவுட்டானார். அடுத்து வந்த குசால் பெரேராவை வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னில் வெளியேற்றினார்.

ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழந்தாலும் மறுமுனையில் குசால் மெண்டிஸ் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 38 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இந்தியா சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.இந்தியா தரப்பில் சர்துல் தாகுர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், உனத்கட், சஹால், விஜய்சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன்பின், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 11 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ராகுல் களமிறங்கினார். அவரை தொடர்ந்து ஷிகர் தவான் 8 ரன்னில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி ஓரளவு அதிரடியாக ஆடியது. ரெய்னா 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து மணீஷ் பாண்டே இறங்கினார். இருவரும் நிதானமாக ஆடினர். ஆனால் ஹிட் விக்கெட் முறையில் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதியில், இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், கடந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. மணீஷ் பாண்டே 31 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 
இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டும், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை சர்துல் தாகுர் வென்றார். நாளை நடக்கவுள்ள போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.