தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ரஷ்ய கடலில் மூழ்கி உயிரிழப்பு...

 தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ரஷ்ய கடலில் மூழ்கி உயிரிழப்பு...

பலியான மாணவர்களது உடலை தமிழகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெய்வந்த் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பை தொடர இடம் கிடைக்கவில்லை. எனவே ரஷ்யாவில் உள்ள கிரிமியா பெடரல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தற்போது மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அங்குள்ள கடலில் குளிக்க சென்றுள்ளார்,. அப்போது தன்னுடன் படிக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவன் ராட்சத அலையில் சிக்கிக் கொண்டான். இதனால் உயிருக்கு போராடிய நவீனை காப்பாற்ற ஜெய்வந்த் முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவருமே கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ரஷ்ய காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சக மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்துள்ள ஜெய்வந்தின் பெற்றோர் ரஷ்யாவில் இருந்து ஜெய்வந்த் உடலை கொண்டு வர இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் படித்துவந்த ஜெய்வந்த் உயிரிழந்த சம்பவம் அத்திப்பட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது