காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி காட்டம்

காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி காட்டம்

24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மண்டலம் பாலைவனமாக மாறிவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறியவும், எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வரையிலான 731 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதியில் குறிஞ்சிப்பாடி அருகே ஒரு கிணறு, புவனகிரி பகுதியில் 6 கிணறுகள், சிதம்பரம் பகுதியில் 3 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

இவை தவிர, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 10 கிணறுகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 4 கிணறுகள் என மொத்தம் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதிவரை பெறப்பட்டு ஜூன் மாதம் உரிமங்கள் வழங்கப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படலாம். காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது வினாக்களுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருமுறை பதிலளித்திருந்தார்.

ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். அத்துடன், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 65 ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் 24 திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றும் சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.


நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வளங்களை கண்டறிவதையும், உற்பத்தி செய்வதையும் குறைகூற முடியாது. ஆனால், விலைமதிப்பற்ற வேளாண் வளத்தை அழித்துவிட்டு, எண்ணெய் வளத்தை உருவாக்குவது கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகவே அமையும்.எனவே, காவிரிப் பாசன பகுதிகளில் இதுவரை செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மை செழிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்யவேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்