ராமேஸ்வரம்  துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 ராமேஸ்வரம்  துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பல இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. 

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான ராமநாத புரம் தூத்துக்குடி, கன்னி யாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இந்த நிலையில் நேற்று காலை முதல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் சீறி எழுந்தன. இதனால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதியதில் சில படகுகள் சேதமடைந்தன. ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பலத்த காற்று வீசியது. கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதேபோல ராமநாதபுரம், தொண்டி, திருவாடானை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொண்டியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொண்டி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. நேற்று பெய்த மழையால் இப்பகுதியில் பல மாதங்களாக வீசிக்கொண்டிருந்த வெப்பக்காற்று மாறி குளிர்ந்த காற்றாக வீசியது.

ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 600 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடித்து இருப்பதால் இன்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம்,  பாம்பன், தனுஷ்கோடியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் மீன் பிடிப்பதற்கான டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.