மணல் விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

மணல் விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கு எதிரான தமிழக அரசின் தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தடை உத்தரவை ரத்துசெய்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், என்ன விலைக்கு வாங்க முடியும் என்பதையும் கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை பவுதிகரீதியான ஆய்வை முடித்துள்ளதாகவும், ரசாயனரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் தான் மணலை வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும். இதற்கு மேலும் 20 நாட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறினர்.

இதற்கு மணல் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார், மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளதற்கான கட்டணம் மற்றும் அபராதத் தொகையை கட்டிவருகிறோம். தமிழக அரசு விலைக்கு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மணலை விற்பதற்கு எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் அதனை விற்றுக்கொள்வோம். இரண்டுக்கும் அனுமதிக்காமல் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு முடிவெடுக்க நேரம் எடுத்தால் அந்த நாட்களுக்கான துறைமுக கட்டணம், அபராத கட்டணத்தை தமிழக அரசே கட்ட உத்தரவிட வேண்டும் என்றார்.

இதற்கு நீதிபதிகள், இந்த மணலை மலேசியாவிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, உரிய ரசாயன ஆய்வுகள் மேற்கொண்டு அந்த முடிவுகள் சரியாக இருந்தால் நாங்கள் மணலை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆய்வு மேற்கொள்ள எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றார்.

இதற்கு நீதிபதிகள் 20 நாட்களில் உரிய ஆய்வு மேற்கொண்டு கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மணலை வைத்திருப்பதற்கான கட்டணத்தை துறைமுகத்துக்கு தமிழக அரசு கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.