கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி ஆற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொள்ளும் வி‌ஷயத்தில் தமிழ்நாடு - கர்நாடக ஆகிய இரு மாநிலங்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 191.50 டிஎம்சி தண்ணீர் ஆண்டுதோறும் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை முடிந்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்க உத்தரவிட்டிருந்த தண்ணீரில் 14.75 டிஎம்சி குறைத்து ஆண்டுதோறும் 176.75 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். கே.ஆர்.எஸ். அணை மொத்தம் 124.80 அடி உயரம் கொண்டது.நேற்று மாலை நிலவரப்படி அணையில் 112.57 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது.கே.ஆர்.எஸ். அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 314 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5,885 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் கர்நாடக பாசனத்திற்கு வினாடிக்கு 2,500 கனஅடியும், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 2,885 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.